Sunday 25 February 2018

தந்தை   அடிப்பதையும்   பொருட்படுத்தாமல்   அவன்   பாலபிஷேகம்   தொடர்ந்ததால்   அவன்   தந்தையின்   கோபம்   வெறியாக   மாறியது .  கண்   மண்   தெரியாமல்   அவன்   மண்குடங்களில்   சேகரித்து   வைத்திருந்த   பாலை   அவர்   காலால்   உதைத்து   தள்ளினார் .  அதுவரை   தன்னை   மறந்து   ஈசன்   மீது   லயித்திருந்த   விசாரசர்மன்   திடுக்கிட்டு   ஐயனுக்கான   பாலை   காலால்   உதைத்த   பாவ   காரியத்தை   மன்னிக்க   முடியாமல்   பக்கத்தில்   இருந்த   குச்சியை   எடுத்து   ஒங்க   அது   மழுவாக   மாறி   அவன்   தந்தையின்   கால்களை   வெட்டி   அவரை   சாய்த்தது .  அப்போது   ஈசன்   அன்னையுடன்   விசாரசர்மன்   கையை   பிடித்து   அவனை   அணைத்து   கொண்டார் .  என்   பொருட்டு   தந்தையை   கொன்றாயே   என்று  சொல்லி   இனி  நானே   உன்   தந்தை   என்று   சொல்லி   தன்   கழுத்திலிருந்து   கொன்றை   மாலையை   கழற்றி   அவனுக்கு   போட்டார் .  இனி   எம்   திருத்தொண்டர்களுக்கு   நீயே   தலைவன்   யாம்   உண்ட   அமுது   எமக்கு   படைக்கப்படும்   எல்லாம்   உம்மையே   சேரும்படி   சண்டேஸ்வர   பதவி   உனக்கு   அளிக்கிறோம்  என்று    அனுகிரகித்தார்.  அவன்  தந்தைக்கும்    கால்கள்   வரச்செய்து   சிவபதம்   அளித்தார் .  பல   சிவாலயங்களில்   உத்சவத்தின்  போது   பஞ்ச   மூர்த்திகளாக   ஈசன்   அன்னயுடன்    ஐந்தாவது   மூர்த்தியாக   இவரும்   வீதிவலம்   வருவதை   காணலாம் .

Saturday 24 February 2018

மறுநாள்   எச்சதத்தன்   மகன்   ஆவினங்களை   மேய   ஒட்டி   செல்லும்போது   அவன்   அறியாதவாறு   அவனை   பின்தொடர்ந்தார் .  விசாரசர்மன்   சிவலிங்கத்திற்கு     பூஜை   செய்ய   அமர்ந்தான் .  அவன்   தந்தை   அவன்   அறியாதவாறு   ஒரு   மரத்தில்   ஏறி   அமர்ந்து   அவனை   கவனித்தார் .  வழக்கம்போல்   தன்னிச்சையாக   பசுக்கள்   பாலை   சொரிந்தன .  மண்   பாண்டங்களில்   அப்பாலை   ஏந்தி   லிங்கத்திற்கு   தன்னை   மறந்து   அபிஷேகம்   செய்ய   தொடங்கினான் . இதை   கண்ட   எச்சதத்தன்   எல்லை   இல்லா   கோபத்துடன்   பாலை   இவ்வாறு   மணலில்   கொட்டி   வீணடிக்கிறாயா ?  என்று   கத்திக்கொண்டு   ஒரு   குச்சியை   எடுத்து   அவனை   அதனால்   விளாசினார் .  ஆழ்ந்த   பக்தியில்   இருந்த   அவன்   இவை   எதையும்  உணரும்   நிலையில்    இல்லை .

Friday 23 February 2018

இவ்வாறு   விசாரசர்மனின்   சிவஆராதனை   தொடர்ந்தது .  அவன்   மனமும்   ஆனந்தம்   அடைந்தது . வழக்கமாக   பசுக்களும்   இவன்   பாலபிஷேகத்திற்கு   தேவையான   பாலை   இவனுக்கு   அளித்துவிட்டு   சொந்தக்காரர்களுக்கும்   வஞ்சனையின்றி   பால்   பொழிந்தன .  அப்போது   ஒருநாள்   துரதிஷ்டவசமாக  ஒருவன்   விசாரசர்மன்     மணல்  லிங்கத்திற்கு   பால்   அபிஷேகம்   செய்வதை   பார்த்துவிட்டு   சிறுவன்   பாலை   வைத்துக்கொண்டு    விளையாடுவதாக   எண்ணி   அக்கிரகாரத்தில்   எல்லோரிடமும்   இதை   சொல்லிவிட்டு   அவன்   தந்தை   எச்சதத்தனிடமும்   முறையிட்டான் .  அவரும்   சிறுபிள்ளை   தெரியாமல்   செய்திருப்பான் .  கண்டிக்கிறேன்   என்று   சொல்லி  விட்டார் .  

Wednesday 21 February 2018

இவ்வாறு   விசாரசர்மனுக்கும்   ஆவினங்களுக்கும்   உள்ள   பிணைப்பு   வளர்ந்தது .  பசுக்கள்  அவனை   உரசி   நின்று   அவன்   தடவி   கொடுக்கும்   போது      அவை  தன்னை  அறியாமல்    பால்   சுரந்தன .  அதை   கண்ட   விசாரசர்மனுக்கு   ஒரு   யோசனை   தோன்றியது .  தன்   இச்சையாக   அவைகள்   சுரக்கும்   பாலமிர்தத்தை   ஈசனுக்கு   அர்ப்பணித்தால்   என்ன   என்று   யோசித்தான் .  உடனே   அதை   செயல்   படுத்த   முடிவு   செய்தான்   மண்ணியாற்றின்    கரையில்   ஒரு   அத்தி   மரத்தை   கண்டான் .  அதுவே   தகுந்த   இடம்   என   கருதி   ஆற்று   மணலில்   ஒரு   லிங்க   வடிவம்   அமைத்து   அவ்விடத்தை   கோவிலாக்கினான் .  பசுக்கள்   தன்னிச்சையாக   சொரியும்   பாலை   எடுத்து   வந்து   தான்   வடிவமைத்த   ஐயனுக்கு   பால்   அபிஷேகம்   செய்ய   தொடங்கினான் .  பக்தியும்   ஆனந்தமும்   பெருக்கெடுக்க   அவன்   இத்தெய்வீக   பணியை   தொடர்ந்தான் .  இவன்   பாலை   எடுத்து   இவ்வாறு   கைங்கர்யம்   செய்ததால்   பசுக்களின்   சொந்தக்காரர்களுக்கு   எந்த   வித   குறையும்   ஏற்படவில்லை .    பால்   அளவு   அதிகமாயிற்று   என்று   சொல்லலாம் .    

Monday 19 February 2018

இவனுடைய   பராமரிப்பில்   ஆவினங்கள்   அளவிலா   மகிழ்ச்சி   அடைந்தன.   இவனுடைய   ஸ்பர்சித்திலேயே   தன்   கன்றுகளை    கண்ட  ஆனந்தம்   எய்தி   தங்களை   அறியாமல்   பால்  சொரி ந்த ன .   இவர்   பராமரிப்பில்   ஆவினங்கள்   அதிகமாக   பால்   கொடுத்ததால்   அக்கிரகாரத்து   மக்கள்   மகிழ்ந்து   விசாரசர்மனை   வெகுவாக   புகழ்ந்தனர் .  விசாரசர்மனின்   ஐயன்   மீது   கொண்ட   பக்தி   வளர்ந்து   கொண்டே   இருந்தது. 

Sunday 18 February 2018

 விசாரசர்மன்   அப்பசுக்களிடம்   காட்டிய   அன்பு   அவன்  ஈசனிடம்   காட்டும்   அன்பை  போல்   வியக்க   வைப்பது .  அவ்வுயிர்களிடமும்   அவன்   ஈசனை   கண்டான்   போலும் .   அவ்வாவினங்களும்   அவனிடம்    அளவிலா   அன்பை    சொரிந்தன.  அளவிலா   பாலை   சொரிந்தன .  தினமும்   அவன்   அதிகாலையில்    எழுந்து   காலைக்கடன்களை   முடித்துவிட்டு   பாடசாலை   சென்று   அங்கு   தன்   அத்யயனம்   முடித்துக்கொண்டு    மாடுகளையும்   கன்றுகளையும்   திரட்டிக்கொண்டு   மண்ணியாற்றங்கையில்   செழிப்பான   புல்வெளி    நிறைந்த   இடத்திற்கு   ஒட்டி  சென்று   அவைகளை   மேயவிடுவான் . 

Wednesday 14 February 2018

ஒரு   நாள்   விசாரசர்மன்   பாடசாலை   மற்ற   மாணவர்களுடன்   செல்லும்போது   அவன்   கண்ட    காட்சி   அவனை   வெகுவாக   பாதித்தது .  அக்கிரகாரத்து    பசுமாடுகளை   மேய்த்து   செல்லும்  சிறுவன்   ஒரு   கன்று   முட்ட   வந்ததால்   கோபம்   கொண்டு   தன்   கையில்   இருந்த   தடியால்   துளியும்   இரக்கமின்றி   அதை   அடித்து   கொண்டிருந்தான் .  பதறிப்போன   விசாரசர்மன்   அவன்  கையிலிருந்து   தடியை   பிடுங்கி   எறிந்து   விட்டு   அவனை   கடுமையாக   கண்டித்தான் .  பசுக்ள்   காமதேனுவின்   வழிவந்தவை .  தெய்வாம்சம்   பொருந்திய வை  வணக்கத்திற்கு   உரியவை    முட்டவந்தால்   விரட்டி   விடாமல்   இப்படி   அடிப்பாயா?  என்று   அவனை  வெகுவாக   கண்டித்தான் .  ஆனாலும்   அவன்   மனம்   சமாதானம்   ஆகவில்லை .  உடனே   மறுநாள்   முதல்   பசுக்களை   தானே   மேய்க்க   அழைத்து     செல்ல   வேண்டும்   என்று   முடிவெடுத்தான் .  அதை   அடுத்த   நாள்   செயல்   படுத்தவும்   ஆரம்பித்தான் .

Tuesday 13 February 2018

திருசெய் ஞல்லூர்   சோழநாட்டில்   பழைமையான    பெருமை   வாய்ந்த   திருத்தலம் .  ஒரு   கட்டத்தில்   அந்நாட்டின்   தலையாகராகவும்   விளங்கிய   தலம் .  கந்தவேள்   சூரபதுமனை   வெற்றி   வாகை   சூடியதும்   இங்கு   லிங்கம்   பிரதிஷ்டை   செய்து   வணங்கிய   தலம் .  இவ்வாறு   பெருமை   பெற்ற   இத்தலத்தில்   நிறைய   சைவ   அந்தணர்கள்   வாழ்ந்ததில்   அதிசயமில்லை .  அங்கு   எச்சதத்தன்  என்றொரு   வேதியர்  தன்   மனைவி   பவித்திரையுடன்   வாழ்ந்து   வந்தார் .   அவர்களுக்கு   ஈசன்   அருளால்   ஒரு ஆண்   குழந்தை   பிறந்தது .  அக்குழந்தைக்கு   விசாரசர்மன்   எனப்   பெயரிட்டு   அருமையாக   வளர்த்து   வந்தனர் .   அவன்   பூர்வஜென்ம   புண்ணியத்தால்   வெகு   சிறிய   வயதிலேயே   வேத   சாஸ்த்திரங்கள்   ஆகமங்கள்   எல்லாவற்றிலும்   அபார   தேர்ச்சி   பெற்று   இருந்ததுடன்   சிவபெருமானிடம்   அபார   பக்திகொண்டு   விளங்கினான் .எப்போதும்   அவர்   சிந்தனையாகவே   இருந்தான் .

Sunday 4 February 2018

மெய்மையே   திருமேனி   வழிபடா  நிற்க
வெகுண்டெழுந்த   தாதைதாள்   மழுவினால்   எறிந்த
அம்மையான்   அடிச்   சண்டி   பெருமானுக்கு   அடியேன்
ஆரூரன்   ஆரூரில்   அம்மானுக்கு   ஆளே |