Thursday 29 December 2016

இவ்வாறு  பெருமை  வாய்ந்த  தமிழ்  நாட்டில்  திருமுனைப்பாடி  எனும்  நாட்டில்  திருநாவலூர்  எனும்  ஊரில்  சடையனார் என்று  ஒரு  அந்தணர் தம்  மனைவி  இசைஞானியாருடன்  இல்லற  நெறி  தவறாத   நல்ல  தம்பதியினராக  வாழ்ந்து  வந்தனர் .அவர்கள்  தவ  புதல்வனாக  சுந்தரர்  பிறந்தார் . இவையெல்லாம்  சுந்தரர்  வரலாற்றில்  விரிவாக  சொல்லி  இருக்கிறோம் . சுந்தரர்  நம்பியாரூரன்  எனும்  பெயருடன்  அங்கு  வாழ்ந்தான் மூன்று  வயது  ஆனபோதே  அவன்  அழகிலும்  அறிவிலும்  மயங்கிய  அரசன்  நரசிங்க  முனையார்  அவனை  வளர்க்க  பிரியப்பட்டு  அக்குழந்தையை  அழைத்து  சென்றார் .  அவ்விவரங்கள்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறோம் . சுந்தரர்  வளர்ந்து  அவருக்கு  திருமணம்  நிச்சயிக்க  பட்டபோது  ஈசன்  சுந்தரருக்கு   வாக்களித்தபடி  அவரை  தடுத்தாட்கொள்ள  முதியவராக  வந்து  ஓலையை  காட்டி  அவரை  தன்  அடிமை  என்று  வாதாடி  திருவெண்ணைநல்லூர்  அழைத்து  சென்று  அவரை  தன் மனம்  கவர்ந்த  தம்பிரான்  தோழனாக  மாற்றியதையும்  கண்டோம் .

Thursday 22 December 2016

மனுநீதி  சோழன்  கதை யாவரும்   அறிந்ததே . தன்  மகன்  வீதி  விடங்கன்  தேரில்   சென்ற  போது    இளம் கன்று  ஒன்று  வேகமாக  ஓடிவந்து  தேரின்  சக்கரத்தில்  அடிபட்டு  மாண்டு  போனது .விதிவிடங்கன்  அதிர்ந்து  போய்  பெரும்  வேதனைக்க்கு  உள்ளானான் . தாய்  பசு  கண்ணீர்  மல்க  மன்னன்  அரண்மனை  முன்னே  உள்ள  ஆராய்ச்சி மணியை  அடித்தது . மன்னனும்  மனம்   கலங்கி  பசுவுக்கு   தக்க  நீதி  வழங்க  தன்  மகனை  வீதியில்  படுக்கவைத்து  அவன்  மீது  தேரை  ஓட்டி  கொல்லுமாறு  ஆணை  இடுகிறான் . அப்போது  அந்த  அதிசயம்  நிகழ்கிறது . தர்மதேவதையே  அக்கன்றாக  வந்து  அரசனின்  பெருமையை  உலகம் உணர இந்நாடகம்  நடத்தியதாக  அசரீரி வாக்கால்  அறிந்து  யாவரும்  பெரும்  மகிழ்ச்சி  அடைந்தனர் . இவ்வாறு  பெருமை  மிக்க  வரலாறு  படைத்தது  திருவாரூர்  என்று    உபமன்யு  கூறுகிறார் . சுந்தரர்  ஆரூர்  ஈசனிடம்  அளவு  கடந்த  பிரேமை  கொண்டிருந்தார் . கைலாய  பெண்ணான  கமலினியும்  அங்கே  பறவை  நாச்சியாராக  பிறக்கிறார் 

Monday 19 December 2016

மேலும்  முனிவர்  கூறுகிறார் , சிவபார்வதி  திருமணத்தின்  போது  இமயத்தில்  எல்லோரும்  கூடிவிட  வடபாகம்  தாழ்ந்து தென்பாகம்  உயர, உலகம்  சமநிலை  பெற  ஈசன்  அகத்திய  முனிவரை  தென்  பக்கத்திற்கு  அனுப்பி  அங்கேயே  அவருக்கு  தன்  திருமண  கோலத்தை  காண்பிப்பதாக  வாக்களிக்கிறார் . கங்கை  நீரை  கமண்டலத்தில்  ஏந்திக்கொண்டு  தென்  திசையில்  பொதிகை  மலையில்  அகத்தியர்  தவமிருக்கிறார் .தென்பகுதி  தாரகாசுரன்  அட்டூழியத்தால்  வளமிழந்து  இருந்தது . விநாயக  பெருமா  கமண்டலத்தில்  இருந்த  கங்கை  நீரை கவிழ்த்து காவிரியாக  ஓடவைத்து  செழுமையான  பகுதியாக  மாற்றுகிறார் . காவிரி  பல  கிளைகளாக  பிரிந்து  தென்  பகுதி  முழுமையும்  செழிப்பாக்குகிறது . பல  புண்ணிய  க்ஷேத்திரங்கள்  உண்டாயின . அதில்  திருவாரூர்  முக்கியமானதலம் .அங்கு  அரசாண்ட  மனுநீதி  சோழன்  நீதிக்கு  ஒரு  எடுத்துக்காட்டாக  வாழ்ந்தவன் .

Friday 16 December 2016

உபமன்யு  முனிவரை  மற்ற  ரிஷிகள்  தென் பகுதி   எவ்வாறு  உயர்ந்தது  என்பதை  விளக்குமாறு  வினவினர் . உபமன்யு  முனிவர்  பதில்  உரைக்கையில்  தென் பாகம்  சிறந்த   பெரும் கோயில்களை   தன்னகத்தே  கொண்ட  இடம்.  அது .புலியின்  பாதங்களை  கொண்ட  பெரும்  முனிவர்  வாழ்ந்த  பெரும்  பற்ற  புலியூர் , அன்னை  காமாட்சியாக  தவம்  செய்த  காஞ்சி .திருவை ய்யாறு  பிரளய  காலத்தில்  தோணியாக  மிதந்த  திருத்தோணிபுரம்  எனும்  சீர்காழி  மேலும்  திருவாரூர் . இவ்வாறு  உயர்ந்த  தலங்களை  குறிப்பிட்டார் .

Thursday 15 December 2016

நந்தவனத்தில்  கமலினி , அனந்திகை  எனும்  இரு  பெண்களின்  அழகில்  ஒரு  கணம்  மயங்கி  விட்ட  சுந்தரரை  ஈசன்  புவியின்  தென்  பகுதியில்  பிறந்து  அப்பெண்களுடன்  சிலகாலங்கள்  வாழ்ந்து  இன்பம்  அனுபவித்து  விட்டு  மறுபடி  கைலாயம்  திரும்புமாறு  கட்டளை இட்டார் . அதிர்ந்து  போன  சுந்தரர்  ஈசன்  இச்சை  அதுவானால்  அப்படியே  நடக்கட்டும்  என  மனம்  சமாதானம்  அடைந்து தன்னை  புவியிலும்  காத்து  ரக்ஷிக்க   வேண்டும்  என்றும்  தான்  மறுபடி  இத்தகைய  சிக்கல்கள்  வரும்போது  தன்னை  புவியிலும்  காத்து  அருள  வேண்டும்  என்று ஈசனை  வேண்டினார் . ஈசனும்  அவ்வாறே  வாக்களித்தார் . இவ்வாறு  அம்மூவரும்  தென் பகுதியில்  வந்து  பிறந்தனர்   

Sunday 11 December 2016

ஒருநாள்  சிவபெருமான்  தேவர்களின்  இச்சைப்படி  தன்னை  நன்றாக  அலங்கரித்துக்கொண்டார் . தேவர்கள்  அவ்வழகை  கண்டு  அதிசயித்து  பரவசமடைந்தனர் .ஈசன்  மகிழ்ந்து  கண்ணாடி முன்  நின்று  அதில்  தெரியும்  தம் பிரதி  பிம்பத்தை சுந்தரா   வா   என்றழைத்தார் .  அவரும்  வந்ததும்   அவரை தேவர்கள்  வாழ்த்தி  வணங்கினர் .சுந்தரரும்  ஈசனின்   திருநீறு  பாத்திரம்  ஏந்தி  அவருடன்  இணை பிரியாது  இருந்து  வந்தார் .  ஈசன்  கட்டளைக்கு  இணங்கி  ஆலகால  விஷத்தை  ஏந்தி  வந்து  ஆலால  சுந்தரர்  என்று  அழைக்கப்பட்டார் . இதை  சுந்தரர்  வரலாற்றில்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறோம் . இவர்  ஒரு  நாள்  ஈசனுக்கு  மலர்  கொய்ய  செல்லும்போது  அன்னையின்  தோழியர்  இருவரை  கண்டு  ஒரு  கணம்  மனம்  பேதலித்து  அதன்  காரணமாக  அம்மூவரும்  இப்புவியில்  பிறந்து  சில  காலம்  கழிக்க  நேரிட்டதையும்  அவ்வரலாற்றிலேயே  கண்டோம் .

Thursday 8 December 2016

உபமன்யு  அவ்வொளியை  கண்டு  மெய் சிலிர்த்து  கைகூப்பி  வணங்கினார் .மற்ற  ரிஷிகள்  ஆச்சர்யத்துடன்  அதை  கவனித்து  அதன்  காரணத்தை  வினவினர் . உபமன்யு  முனிவர்  அவர்களை  நோக்கி  " நம்பி  ஆரூரர்  எனும்  பெரும்  சிவத்தொண்டர்  பூஉலகில்  தன்  பணிகளை  முடித்துக்கொண்டு  கைலை  திரும்புகிறார் ." என  பதிலுரைத்தார் . ஆர்வத்துடன்  அம்முனிவர்கள்  அத்தொண்டரை  பற்றி  கூறுமாறு வேண்டினர் . 

Wednesday 7 December 2016

அய்யன்  உமை  அன்னையுடன்  வாசம்  செய்யும்  கைலையின்  பெருமை  சொல்வதற்கு  அரியது .தேவர்கள்  பூதகணங்கள்  கீதம்  இசைக்க  மஹாவிஷ்ணு . ப்ரம்மா  மற்ற  தேவாதி தேவர்கள்  வேதங்களால்  தோத்திரம்  செய்ய ஈசன் இடப்பாகத்தில்  அன்னையுடன்  வீற்றிருக்கும்  காட்சி  விவரிக்க  ஒண்ணாதது . கைலை  மலையின்  அடிவாரத்தில்  பல  முனிவர்கள்  தவம்  செய்கின்றனர் . அவர்களில்  உபமன்யு  முனிவர்  மிக  பெருமை  வாய்ந்தவர்  சிறந்த  சிவ பக்தர் .கிருஷ்ண  பரமாத்மாவே  அவரிடம்  தீக்ஷை  பெற்றார்  என்றால்  அவர்  பெருமைக்கு  நிகர்  ஏது ?
     அவர்கள் ஒரு  நாள்  பூஜை  முடிந்து  உபமன்யு  முனிவரிடம்   அறிவுரை  கேட்டுக்கொண்டு  இருந்த  பொழுது  ஒரு  பேரொளி  ஆகாயத்தில்   தோன்றி  கைலை  நோக்கி  சென்று  மறைந்தது .

Friday 2 December 2016

தொண்டர்  பெருமை  விளக்க  இப்பாடலை  காண்போம் . முருக  பெருமான்  அவ்வை  பிராட்டியிடம்  சில  வினாக்களை  தொடுக்கிறார் . பதிலை  அளிக்கும்  பிராட்டி  பெரியது எது   எனும்  வினாவிற்கு  தரும்  பதிலே  இப்பாடல் .

பெரிது  பெரிது  புவனம்  பெரிது ,  புவனமோ   நான்முகன்  படைப்பு
நான்முகனோ  திருமால்  உந்தியில்  வந்தோன், திருமாலோ  பாற்கடல்  துயின்றோன் ,
பாற்கடலோ  குறுமுனி  கைஅடக்கம் , குறுமுனியோ  கலசத்தில்  பிறந்தோன்
கலசமோ  புவியில்  சிறுமண்  காணும் , புவியோ  அரவினுக்கு  ஒருதலை  பாரம்
அரவோ  உமையவள்  சிறுவிரல்  மோதிரம் , உமையவாளோ  இறைவர்தம்  பாகத்து  ஒடுக்கம்
இறைவரோ  தொண்டர்தம்  உள்ளத்து  ஒடுக்கம்
தொண்டர்தம்  பெருமை  சொல்லவும்  பெரிதே

இப்பாடலில்  தொண்டர்  பெருமையை  அவ்வையார்  அழகாக  தெளிவாக  விளக்குகிறார் . ஈசன்  சுந்தரரை  இப்புவியில்  பிறக்க  வைத்து  அவரையும்  ஒரு  அல்லலில்  விழவைத்து  தானே  சுந்தரருக்கு  "அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  திருத்தொண்டர்  தொகை  எனும்  அடியார்களின்  பெருமையை  உலகுக்கு  எடுத்து  உரைக்கும்  பாடலை  பாடவைக்கிறார் . ஆக ஐயனே  தான்  தம்  அடியார்களின்  உள்ளத்தில்  வாழ்வதாக  உணர்த்துகிறார் . அத்தகைய  அடியார்களின்  பெருமையை  மிகுந்த  தாழ்மையுடனும்  அளவிலா  பக்தியுடனும்  சேக்கிழார்  பாடும்  இந்நூலை  'பெரிய  புராணம் ' என்று  போற்றுவது  பொருத்தமே .