Saturday 30 June 2018

அப்பருடைய   இந்த   கோலத்தை   கண்டு   மனம்   பொறாமல்   ஈசன்   ஒரு   முனிவர்   வடிவில்   அங்கு   தோன்றினார் .  அங்கு   ஒரு  குளத்தையும்   உண்டாக்கினார் .  அவர்   அப்பர்   இருக்குமிடம்   சென்று   அவரை   நோக்கி '    ' எங்கே   இத்தனை   கடுமையான   பாதையில்  இந்த   பரிதாபமான    கோலத்தில்   செல்கிறீர்கள் ?'  என்று   வினவினார் .  எம்பிரான்   உமை   அன்னையுடன்   அருட்காட்சி   அருளும்   கைலாயத்தை   நோக்கி   செல்கிறேன்   என்று   அப்பர்   பெருமையுடன்   பதிலுரைத்தார் .  முனிவர்   கலகல   என்று   நகைத்து   '  உம்மை   காண   பரிதாபமாக   இருக்கிறது .  கைலாயம்   செல்வது   சாதாரண   காரியமா ?  விண்ணவர்களுக்கும்   மிக  அரிதான   கைலாயத்தை   மானிடராக   காண   நினைப்பது   பேதைமை .  திரும்பி   சென்று   விடுங்கள் .  அதுதான்   உமக்கு  நல்லது   என்று   உரைத்தார் .   அப்பர்   முகம்   வாடியவராய்   இத்தனை  சிரமப்பட்டு   இத்தனை   தூரம்   வந்து  விட்டேன்.  அக்காட்சியை   காணாமல்   போவதாக   உத்தேசம்   இல்லை .  என்று   பிடிவாதமாக   உரைத்தார் .   அவர்   உறுதியை   கண்டு   ஈசன்   மகிழ்ந்து   மறைந்து   போனார் .     

Friday 29 June 2018

கைலை   காட்சியை   காணும்   ஆவல்   மனமெல்லாம்   நிறைந்திருக்க   அவர்    கங்கை   நதியை   கடந்து   நடக்கலானார் .  காடு ,மேடு  பள்ளம்   கல்   முள்ளு   எதாலும்   அவர்   கவனத்தை   சிதற   அடிக்க   முடியவில்லை . வாயில்   பஞ்சாக்ஷரமும்   மனதில்   வேறு   சிந்தனையும்   இன்றி   இரவு   பகல்   பசி   தாகம்   எதுவும்   பாராமல்   நடந்தார் .  சில  காலம்   கிடைத்த   கனிகளை      உண்டார் . பிறகு   அதையும்   தவிர்த்தார் .  நடந்து   நடந்து   அவர்   பாதங்கள்   தேய்ந்து   உதிரம்   கொட்டியது.  அதற்குமேல்   நடக்க   இயலாமல்   கைகளை   ஊன்றி   தவழ   தொடங்கினார் .  முழங்காலும்   தேய்ந்து   பழுதாக   மார்பால்   தேய்த்து   நகர்ந்தார்   உருண்டார் .  உடல்   முழுவதும்   ரத்தவெள்ளமாக   ஆயிற்று .  ஆனாலும்   அவருடைய   உள்ளம்   தளர்ந்தார்   இல்லை .   

Tuesday 26 June 2018

அப்பர்பெருமான்   காளத்திநாதரை   சேவித்ததும்   அவர் மனதில்  எம்பெருமான்   கைலாயநாதராக   காட்சி   அளிக்கும்   கோலத்தை   காண   பெரும்   ஆவல்   எழுந்தது .  மனதில்   பொங்கி   எழுந்த   ஆவலை   அடக்கமுடியாதவராய்  உடனே   புறப்பட்டார் .   மனதில்   ஐயனின்   நினைவும்   உதடுகளில்   அவர்   நாமமுமாக   பல  மலைகள்   பல நதிகளை   கடந்து   வாரணாசி   வந்து   சேர்ந்தார் .  அங்கு   எம்பெருமானை   மனம்   குளிர   சேவித்துக்கொண்டு   தன்னுடன்   வந்தவர்களை     அங்கேயே   விட்டு   விட்டு   அவர்    கயிலையை   நோக்கி   புறப்பட்டார் .    கைலை   பயணமென்றால்    சாதாரணமா ?  அவர்   பட்ட   துன்பம்   எத்தனை   கல்   நெஞ்சங்களையும்   உருக   வைக்கும் .

Saturday 23 June 2018

காஞ்சி    ஏகாம்பரேஸ்வரரை   மனதார   தொழுத  பின்   அருகில்   எம்பிரான் தேவர்களை   காக்க   பண்டாசுரனை   ஹவிஸாக்கி   ஹோமத்தீயிலிட்டு   அழித்த   கச்சிமயானம்   மற்றும்   திருமேற்றளி   போன்ற   இடங்களை   சேவித்துக்கொண்டு   முறுபடி   காஞ்சி   திரும்பினார் .  பிறகு  மயிலை ,  திருக்கழுக்குன்றம்,  திருவான்மியூர் ,  திருவொற்றியூர்   முதலிய   தலங்களை   சேவித்துக்கொண்டு    திருக்காளத்தியை   அடைந்தார் .  பொன்முகலி   நதியில்   நீராடி   காளத்திநாதரையும்   அவர்   பக்கம்   நிற்கும்   கண்ணப்பரையும்   சேவித்துக்கொண்டார் .  

Monday 18 June 2018

கிடைக்கப்பெறாத   இப்பேறை   பெற்ற   அப்பர்பெருமான்   திருப்பைஞிலி   பெருமானை   மனமுருக   தொழுது   பதிகங்கள்   பாடி  மகிழ்ந்தார்.  அங்கு   சில   நாட்கள்   உழவார   பணி   செய்து   பிறகு   தொண்டைநாட்டு   திருத்தலங்களை   சேவிக்க   புறப்பட்டார் .  அயனும்   மாலும்   அடிமுடி   காண   முடியாத   பெரும்   ஜோதியாக   நின்ற   எம்பெருமான்   கோயில்கொண்டிருக்கு   திருவண்ணாமலையை   சேவித்து   மகிழ்ந்தார் .  பிறகு   காஞ்சி   அடைந் தார் .  சமணர்களின்   போதனையால்   பல்லவ   மன்னனால்   பலவித   சித்திரவதைக்கு   ஆளாகி   அத்தனையிலிருந்தும்   ஈசனின்   பெரும்   கருணையால்   மீண்டுவந்த   அதிசயத்தை   கேள்விப்பட்டிருந்த   மக்கள்   அவரை   வரவேற்க   பெரும்   திரளாக   கூடி   இருந்தனர் .  அதை   கண்டு   அப்பர்   மெய்சிலிர்த்து   போனார் .  பதிகங்களும்   தாண்டகங்களும்   பாடி  ஈசனை   மகிழ்வித்து  பக்திக்கு   ஒரு   எடுத்துக்காட்டாக   திகழ்ந்த   அப்பெருமகனை   மக்கள்   ஆரவாரத்துடன்   எதிர்கொண்டு   வரவேற்றனர் .   அவரும்   ஏகாம்பரேஸ்வரரை   மனமுருக   பாடி   தொழுது   ஆனந்தம்   எய்தினார் .

Tuesday 12 June 2018

கரடுமுரடான   அப்பாதையில்   அப்பர்   நடந்து  மிக   களைத்து   போனார் .  ஆனாலும்   விடாது   தொடர்ந்து   நடக்கலானார் .  ஈசன்   பக்தனின்   இந்த   அவதியை   காண   பொறுப்பாரா?  உடனே   அப்பாதையில்      சிறு   சோலையையும்    ஒரு   தெளிந்த   நீர்   குளத்தையும்   அமைத்தார் .  பக்தனுக்காக   கட்டு   சோறையும்   கையில்   எடுத்துக்கொண்டு   அப்பர்   முன்   சென்று   உங்களை   பார்த்தால்   மிகவும்   களைத்துப்போய்   பசியுடன்    இருப்பதாக   தெரிகிறது .      .  அங்குள்ள   குளத்தில்   கை   கால்   சுத்தம்   செய்து   கொண்டு   வாருங்கள் .  என்னிடம்  உள்ள    அன்னத்தை   உண்டு   பசியாருங்கள்   என்று   அன்புடன்   அழைத்தார் .  நாவுக்கரசரும்   மகிழ்ச்சியுடன்   ஒப்புக்கொண்டார் .  இருவரும்   பேசிக்கொண்டே   சிறிது   நேரம் கழித்தனர் .  அப்பர்   திருப்பைஞிலி   செல்வதாக   கூறினார் .  தானும்   அவ்வழிதான்   செல்வதாக  கூறி   சேர்ந்தே   செல்லலாம்   என்று  கூறி   இருவரும்   நடந்தனர் .  கோயிலை   நெருங்கும்போது   திடீரென   அவர்   மறைந்தார்.  அவர்   ஆ லையத்துள்   சென்று   மறைந்தார் .  அப்போதுதான்   அப்பர்   தன்னுடன்   இததனை   நேரம்   இருந்தது   தன்   பசி   தாகம்   உணர்ந்து  தாயினும்   பரிவுடன்   தன்   பசியாற்றியது   ஈசனே   என்று   உணர்ந்து   மெயசிலிர்த்து   போனார் .  உள்ளம்   உருக   பாடி   தொழுதார் .    

Sunday 10 June 2018

சமணர்களிடமிருந்து   வடதளி   ஆலயத்தை   மீட்டு   அங்கு   எம்பெருமானுக்கு   வழிபாடுகள்   குறைவர   தொடங்கியதும்   மன   நிம்மதி   அடைந்த   அப்பர்   பெருமான்   தன்   தலயாத்திரையை   மீண்டும்   தொடர்ந்து   காவிரி   கரையோரம்   உள்ள   க்ஷேத்திரங்களை   சேவிக்க     யாத்திரையை   தொடர்ந்தார் .  ஒரு   சிலந்தியும்   யானையும்   ஐயன் மீதுள்ள    பக்தியால்   போட்டியில்   மடிய    அவ்விரு   ஜீவன்களுக்கும்   உயர்   பிறவி   அளித்த   ஜம்புகேஸ்வரர்   கோயில்  கொண்டிருக்கும்   திவானைக்காவலை   அடைந்து   அங்கு   துதித்து   மகிழ்ந்தார் .  தொடர்ந்து   திருச்சி ,      பராய்த்துறை   போன்ற   தலங்களை   சேவித்து   கொண்டு   பதிகங்கள்   பாடி   துதித்து   மன   நிறைவு    பெற்றார் .  பிறகு   காவிரியை   கடந்து   திருப்பைஞிலியை   நோக்கி   புறப்பட்டார் .   அப்பாதையில் தான்   அவர்   யாருக்கும்   அரிதான   அப்பெரும்பேரை   ஐயனிடமிருந்து   பெற்றார் .

Tuesday 5 June 2018

வடதளி   ஆலயத்திற்கு   அப்பர்   வரப்போகிறார்   என்ற   செய்தி   கேட்டு   மக்கள்   பெரும்   நம்பிக்கையுடன்   இனி   தங்களுக்கு   நல்ல   காலம்   பிறக்கும்   என்று   பெரும்   ஆவலுடன்   அவருக்கு   பெரும்   வரவேற்பு   அளிக்க   ஏற்பாடு   செய்யலானார்கள் .   அப்பரும்   மக்களின்   இந்த  வரவேற்பை   மகிழ்ச்சியுடன்   ஏற்றார் .  மக்கள்   அங்குள்ள   நிலைமையை    கூறியதை    கேட்டு   மிக்க   அதிர்ச்சி   அடைந்த   நாவுக்கரசர்   அங்கு   சமணர்களால்   ஏற்பட்ட   இக்கொடுமையை   தீர்க்காமல்   அங்கிருந்து   நகருவதில்லை   என   உறுதி   பூண்டார் .  அவர்   ஆலயம்   சென்று   'ஐயனே   சமணர்களால்   இத்தகைய   பெரும்   துன்பத்திற்கு   ஆளாகி   உன்னை   தரிசிக்க   முடியாமல்   தவிக்கும்   அப்பாவி   மக்களை   நீ   இவ்விதம்   சோதிக்கலாமா ?   அவர்கள்   துயரை   தீர்க்கும்வரை   நான்   உணவு   அருந்த   மாட்டேன் .  இது   சத்தியம் '  என்று  கூறி   அங்கு   தங்கினார் .  மக்கள்  அவர்   உணவு   அருந்தாமல்   பட்டினி   கிடப்பதை   காண   சகியாமல்   தவித்தனர் .  இதற்கு   மேல்   ஐயன்   சோதிப்பாரா?   அன்றிரவு   ஈசன்   அரசனின்   கனவில்   தோன்றி   ' அரசனே   உன்கடமையை   மறந்து   சமணர்களால்   மக்கள்   படும்   துன்பத்தை   அறிந்தும்   கடமையை   செய்ய   தாமதம்   செய்யலாமா'  என்று   கூறி   தன்   திருமேனி   புதைத்து   வைக்கப்பட்ட   இடத்தையும்   அவருக்கு   காட்டிக்கொடுத்து   மறைந்தார் .  அரசன்   திடுக்கிட்டு   எழுந்து   தன்   தவறை   உணர்ந்து   உடனே     ஆலயத்திற்கு   சென்று   அப்பரை   வணங்கி   அவருடன்   ஈசன்   அடையாளம்   காட்டிய   இடத்திற்கு   சென்று   அத்திருமேனியை   மீட்டு   அப்பர்   அடிகளால்   மறுபடி   பிரதிஷ்டை   செய்வித்து   மகிழ்ந்தார்   மக்களும்   பெருமகிழ்ச்சி   அடைந்தனர் .  இதற்கு   காரணமான   சமணர்களும்   கடுமையாக   தண்டிக்கப்பட்டனர் .

Monday 4 June 2018

நாவுக்கரசர்   சம்பந்தரை   பற்றிய   கவலையில்   மனசோர்வுடன்   திருமறைக்காட்டிலிருந்து  புறப்பட்டு   தல   யாத்திரையில்   திருநாகைக்காரோணம்   திருவீழிமழலை   முதலிய   இடங்களை   தரிசித்து   கொண்டு  திரு ஆவடுதுறையை   அடைந்து   சம்பந்தருக்கு   ஆயிரம்   பொன்    அளித்து   அருளிய  கருணையை   போற்றி   'மாயிருஞாலம்  எல்லாம் '  எனும்   பதிகம்   பாடி   ஐயனை   மகிழ்வித்தார் .  அங்கிருந்து   பழையாறை   சென்றார் .  அப்போது   அங்கு   சமணர்கள்   ஆதிக்கம்   ஓங்கி   இருந்தது .  அவர்களின்   சூழ்ச்சியால்  வடதளி   ஆலயத்தில்    ஐயனின்   லிங்க   திருமேனி   களவாடப்பட்டு   மறைத்து   வைக்கப்பட்டிருந்தது .  ஆதலால்   பூஜை   நிறுத்தப்பட்டிருந்தது .  மக்கள்   பெரும்   துக்கத்தில்   ஆழ்ந்திருந்தார்கள் .  நாவுக்கரசர்   வருகிறார்   எனும்   செய்தி   அவர்களுக்கு   பெரும்   மகிழ்ச்சியையும்   நம்பிக்கையையும்   அளித்தது .

Friday 1 June 2018

அப்பர்பெருமான்   மனம்   நிறைவோடு   திருவாய்மூர்   ஐயனை   தரிசித்து   ஆனந்தம்   அடைந்தார் .  பிறகு   சம்பந்தரோடு   மடத்தில்   தங்கிவிட்டு   காலை   திருமறைகாடை   அடைந்தனர் .  அங்கிருக்கும்போது   மதுரையிலிருந்து   அரசி   மங்கையற்கரசியரும்   அமைச்சர்   குலச்சிறையாரும்   அனுப்பியதாக   தூதர்கள்   சம்பந்தரை   தேடி   வந்தனர் .  பாண்டிய  மன்னன்   சமணர்களுக்கு   அடிமையாக   இருப்பதால்   சைவர்கள்   பெரும்   துன்பம்   அடைவதால்   சம்பந்தர்   வந்து   சைவம்   மறுபடி   தழைக்க   செய்ய  வேண்டும்   என்று   அரசி   மிக   பணிவோடு   வேண்டி   கொள்வதாக    கேட்டுக்கொண்டனர் .  அப்பர்   சம ணர்களிடம்    தான்   அனுபவித்த   கொடும்   துன்பங்களை   கூறி   அங்கு   செல்ல   வேண்டாம்    என்று   சம்பந்தரிடம்   மன்றாடி   கேட்டுக்கொண்டார் .  ஆனால்   சம்பந்தர்   சைவர்களின்   துயர்   துடைப்பது   தமது   தலையாய   கடமை   என்று   கூறி   மிக   பணிவோடு   மறுத்துவிட்டார் .  அப்பர்  மனக்கவலையோடு   திருமறைக்காட்டை   விட்டு   கிளம்பி  தன்   தலயாத்திரையை   தொடர்ந்தார் .