மனநிறைவுடன் ஊர் திரும்பிய நந்தன் அக்கம்பக்கத்திலுள்ள சிவாலயங்களில் தன்னால் முடிந்த திருப்பணிகளை செய்து வந்தார் . அங்கு மற்றவர்கள் தில்லை அம்பலவாணனை பற்றியும் அவர் திருவிளையாடல்களையும் பெருமையாக பேசுவதை கேட்க கேட்க தில்லை செல்ல வேண்டும் எனும் ஆவல் பெருகியது . தில்லை சென்று நடராஜரை தரிசிக்க முடிவு செய்து நண்பர்களிடம் எல்லாம் தில்லை போவதாக சொல்லிக்கொண்டிருந்தார் . ஆனால் தனியாக யோசித்த போதுதான் அதன் தடங்கல்கள் அவருக்கு புரிந்தது . தில்லை சென்று விடலாம் . ஆனால் அம்பலக்கூத்தனின் ஆலயம் எத்தனை பெரியது . இவனால் பிறந்த குலம் காரணமாக ஆலயத்தின் உள்ளே நுழைய முடியாது . பிறகு ஈசனை தரிசிப்பது எவ்வாறு ? இக்கேள்வி அவரை நிலைகுலைய செய்தது . என்ன செய்வது ? எல்லோரிடமும் நாளை போகிறேன் நாளை போகிறேன் . என்று தினமும் சொல்லி வந்தார் . அவருடைய சிவபக்தியும் நடராஜரை காண அவருக்குள்ள அளவு கடந்த ஆவலும் யாவரும் அறிந்ததால் அவரை எல்லோரும் திருநாளைப்போவார் என்றே அழைக்கலானார் .
No comments:
Post a Comment