மறுநாள் அந்தணர் ஈசன் கட்டளையை உளமாற ஏற்று கோவிலில் ஓரிடத்தில் மறைந்து நின்று கொண்டார் . வழக்கப்படி திண்ணன் பூஜா திரவியங்களுடன் மலை ஏறி வேகமாக வந்தான் . அவனுக்கு . வரும்போதே சில அபசகுனங்கள் தென்பட்டதால் ஐயனுக்கு ஏதாகிலும் துன்பம் நேரிட்டதோ என்ற அச்சத்துடன் ஓடி வந்தான் . வந்து ஐயனை கண்டவன் துடிதுடித்து போனான் . அவரது வலது கண்ணில் ரத்தம் வழிவதை கண்டு மனம் பதறிப்போனான் . கையில் கொண்டு அத்தனையும் கிழே நழுவி விழுந்தன . இவ்வாறு யார் செய்தது என பதறி போய் சுற்றும் முற்றும் பார்த்தான் . அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . ஓடி சென்று சில பச்சிலைகளை பறித்து வந்து அதை பிழிந்து அதன் சாற்றை கொண்டு ரத்தத்தை நிறுத்த முயன்றான் . ரத்தம் நிற்கவில்லை . அலறினான் அரற்றினான் . செய்வதறியாது திகைத்தான் .அப்போதுதான் ஊனுக்கு ஊன் தான் சரிவரும் என்று முடிவு செய்து சந்தோஷம் பொங்க அம்பை எடுத்து தனது வலது கண்ணை பெயர்த்து அவரது வலது கண்ணில் பொருத்தினான் . ரத்தம் நின்றது .. திண்ணன் சந்தோசம் தாங்காமல் கூத்தாடினான் . ஈசனை கட்டிக்கொண்டு அனந்தக்கண்ணீர் சொரிந்தான் .
Tuesday, 31 October 2017
Monday, 30 October 2017
மறுநாள் சிவகோசரியார் பூஜைக்கு வந்தவர் மறுபடி வழக்கம் போல் மாமிச துண்டங்களும் அருவெறுப்பான காட்சியை கண்டு மிக மனவருத்தம் கொண்டு எத்தனை நாட்கள் இந்த மாதிரியான வெறுக்கத்தக்க காட்சிகளை காண வேண்டுமோ என்று மனம் நொந்து ஈசனிடம் புலம்புகிறார் . ஈசனை கண்டுகொள்ளாமல் சகித்து கொண்டு இவ்வாறு தம்மை சோதிப்பது தகுமோ என்று தன் மன வருத்தத்தை சொல்லி அழுதார் . பின் தன் கடமையை மனசோர்வுடன் முடித்துவிட்டு சென்றார் . அன்று இரவு அவர் கனவில் தோன்றிய ஈசன் அந்த வேடனின் செய்கைகளை கண்டு அவனுடைய பக்தியை சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று சொல்லி நாளை தம் சன்னதிக்கு வந்து மறைந்து நின்று கவனிக்குமாறு அந்தணருக்கு ஆணை இடுகிறார்.
Saturday, 28 October 2017
திண்ணன் காலையில் எழுந்து வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டையாடி கொன்ற விலங்கை கழுவி பக்குவமாக சமைத்து அங்கு மரத்தில் இருந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து அத்துடன் சேர்த்து தன் வா டிக்கைபடி தன் வாயில் நீரை எடுத்துக்கொண்டு வில்வம் மற்றும் மலர்களை பறித்து தன் தலையில் செருகிக்கொண்டு ஆனந்தமாக ஓடி வந்து தன் செருப்பு காலால் லிங்கத்தின் மீதிருந்த பூக்களை தள்ளி விட்டு தன் வாயில் கொண்டுவந்த நீரால் ஐயனுக்கு அபிஷேகம் செய்து தான் கொண்டுவந்த விலை மதிக்கமுடியாத தன் ஆத்மார்த்த அன்பை சேர்த்து செய்த அந்த உணவை எல்லை இல்லா ஆனந்தத்துடன் படைத்தான் . ஈசன் அதை சொல்லொணா அன்புடன் ஏற்று கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை .
Wednesday, 25 October 2017
இதனிடையில் நாணனும் காடனும் திண்ணனின் மாற்றத்தை அவன் தந்தை நாகனிடம் விவரமாக கூறினர் . பதறிப்போன நாகன் விரைந்து தேவராட்டி மற்றும் மனைவியுடன் காளத்தி மலையை நோக்கி ஓடினான். என்ன முயற்சி செய்தும் திண்ணன் திரும்பி கூட பார்க்கவில்லை . நாகன் ஏமாற்றமும் வருத்தமும் வாட்ட ஊர் திரும்பினான் . தேவராட்டியின் மந்திரதந்திரம் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை . திண்ணன் ஐயனிடம் மனமுருக சம்பாஷித்து கொண்டிருந்தான் . அவரிடம் தான் இரவெல்லாம் கண்விழித்து அவருக்கு காவல் இருக்கப்போவதாகவும் அவர் கவலை இன்றி நித்திரை செய்யலாம் என்று கூறிக்கொண்டிருந்தான் . அண்டங்களையெல்லாம் தன்னுள் வைத்து காத்து ரட்ஷிக்கும் எம்பெருமானுக்கு திண்ணன் துணை தேவைப்பட்டது . இதுவும் ஈசன் திருவிளையாடல் .
Tuesday, 24 October 2017
திண்ணன் இரவு முழுவதும் கண் இமைக்காமல் குடுமித்தேவருக்கு காவல் இருந்தான் . பொழுது விடிந்ததும் இன்றைய உணவிற்கு ஐயனுக்கு தரவேண்டுமே என்ற கவலை வாட்ட வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டையாட கிளம்பினான் . வேட்டையாடிய மிருகத்தை பதமாக வேகவைத்து அதில் அங்கிருக்கும் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து அதில் சேர்த்து பக்குவமாக இலையில் சுற்றி எடுத்துக்கொண்டான் . முன் தினத்தை போலவே வில்வமும் பூக்களும் தலையில் செருகிக்கொண்டு வாயில் நீர் நிரப்பி கொண்டு அவசரமாக மலையை நோக்கி ஓடினான் . அதற்குள் அங்கு அந்தணர் சிவகோசரியார் அங்கிருந்த கோலத்தை கண்டு திகைத்து ஈசனை இவ்வாறு அசிங்கப்படுத்தியது யார் என்று கலங்கியவாறு நன்றாக கழுவி சுத்தம் செய்து தான் கொண்டுவந்த திரவியங்களால் ஈசனை வழக்கம் போல் கிரமமாக பூஜை செய்து விட்டு சென்றார் .
Saturday, 21 October 2017
திண்ணன் வேகமாக சென்று ஆ ற்றங்கரையை அடைந்த போது சட்டென்று கோவிலில் குடுமித்தேவர்க்கு அந்தணர் செய்த பூஜை செயல்கள் நினைவு வந்தது . நீரால் அபிஷேகம் செய்து பூக்கள் சாற்றி பூஜித்திருந்தது நினைவு வந்தது . கையில் இறைவன் பசியாற வெந்த மாமிசம் இருந்தது .மறறொரு கையில் வில் இருந்தது மற்ற வில்வஇலை புஷ்பம் இவைகளை எப்படி எடுத்து செல்வது . ஒரு நொடியில் முடிவு செய்தான் . பூக்களையும் வில்வ இலைகளையும் பறித்து தன் தலை முடியில் செருகி கொண்டான் . ஆற்று நீரை தன் வாயில் உறிஞ்சி கொண்டான் . எல்லாம் தயார் என்று மகிழ்ச்சியுடன் மலையை நோக்கி தாவித்தாவி பரபரப்புட ன் ஓடினான் . ஐயன் தனியாக இருப்பாரே என்ற ஆதங்கம் அவனை வாட்டியது . வேகமாக மலையை அடைந்து குடுமித்தேவரை கண்ட ஆனந்தபரவசம் அடைந்தான் .கூடவே அளவு கடந்த துக்கம் இத்தனை நேரம் இந்த காட்டு மிருகங்கள் ஏகமாக நடமாடும் இந்த பயங்கர வனத்தில் தனியாக எப்படி இருந்தாய் என்று துக்கத்தோடு வெகுவாக அரற்றினான் . தன் செருப்பு காலால் ஐயன் மேலிருந்த புஷ்பங்களை தள்ளிவிட்டு தான் வாயில் கொண்டுவந்திருந்த நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்து விட்டு பூக்களை சாற்றிவிட்டு கொண்டுவந்திருந்த மாமிசத்தையும் படைத்து விட்டு ஐயனுக்கு இரவு தான் தூங்காமல் காவல் இருக்க போவதால் பயமின்றி பசியாறிவிட்டு இருக்கும்படி கூறினான் . அவனுக்குத்தான் அவரை பற்றி எத்தனை கவலை .
Thursday, 19 October 2017
திண்ணன் ஈசன் பசியோடு இருப்பார் என்கின்ற அளவிடமுடியாத பரபரப்பில் செயல்பட்டு கொண்டிருந்தது மற்ற இருவருக்கும் ஆச்சர்யம் அளித்தது . நாணன் கூறியது போல் திண்ணன் மாறித்தான் போயிருந்தான் . ஐயன் இருட்டில் தனிமையில் வாடிக்கொண்டிருப்பார் என்ற நினைவே அவனை வெகுவாக வாட்டியது . வேகமாக வேகவைத்த பன்றி மாமிச துண்டுகளை இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்ப யத்தனித்தான் . மற்ற இருவரும் தம் கூட வந்த வேடுவர்கள் காத்திருப்பார்கள். ஊர் திரும்ப வேண்டும் என்று நினைவு படுத்தினார்கள் . திண்ணன் காதில் வாங்கி கொள்ளவே இல்லை . மலையை நோக்கி வேகமாக ஓட துவங்கினான் .
Subscribe to:
Posts (Atom)