சுந்தரரும் சேரமான் பெருமானும் மதுரையில் பாண்டிய மன்னன் விருந்தினராக அவர் உபசரிப்பில் மகிழ்ந்து இருந்தனர் . அங்கிருந்து கொண்டு திருப்புவனம் சென்று ஐயனை பதிகம் பாடி சேவித்துக்கொண்டு திருஆப்பானுர் திருப்பரங்குன்றம் இன்னும் சில தலங்களையும் தரிசித்தனர் . தம்பிரான் தோழருக்கு தெற்கே மேலும் க்ஷேத்திரங்களை சேவிக்கும் ஆவல் உண்டாயிற்று . மன்னரிடம் விடை பெற்றுக்கொண்டு திருக்குற்றாலம் , திருநெல்வேலி சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று என்பெருமானை மனம் உருக வேண்டிக்கொண்டு சுந்தரர் அங்கிருந்தபடியே மனத்தால் இலங்கை திருக்கேதீஸ்வரத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமானை உள்ளம் உருக சேவித்துக்கொண்டார் .அங்கிருந்து கிளம்பி திருச்சுழியல் எனும் ஊரில் மடத்தில் இரவு தங்கி காலை சோழ நாட்டு திருத்தலங்கள் சேவிக்க எண்ணி படுத்து தூங்கினர் . அருகிலுள்ள கானப்பேர் எனும் காளையார்கோயிலில் குடி கொண்டிருக்கும் பெருமானுக்கு தம்பிரான் தோழரின் பாதங்கள் தம் திருக்கோயிலிலும் பட வேண்டுமென்ற ஆவல் உண்டானது . அவர் சுந்தரரின் கனவில் காளை வடிவில் தோன்றி '' யாம் இருப்பது கானப்பேர் '' என்று கூறி மறைந்தார் . திடுக்கிட்டு விழித்த சுந்தரர் மெய்சிலிர்த்து ஐயனின் திரு உள்ளத்தை சிலிர்ப்போடு சேரமானிடம் கூறி அவ்விடம் சென்று ஐயனின் புகழ் பாடி பயணம் தொடர்ந்தார் .
No comments:
Post a Comment